பாடல் எண் :1312
ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலு முதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.

8
பொ-ரை: உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றியூர்த்தலத்து இறைவர்.
கு-ரை: உகந்து அவர் ஏறிற்று - மகிழ்ந்து அப்பெருமான் ஏறியது. ஒன்று - இடபம் ஒன்றே. போலும் அனைத்தும் ஒப்பில் போலி; உரையசை, உதைத்துக்களைந்தது - காலால் உதைத்து நீக்கியது. ஒன்று - அடியார் பெருமை எண்ணாத இயமனின் பிழை. சூடிற்று ஒளிமாமதி ஒன்று. உகந்தது - விரும்பிக்கொண்டது. ஒன்று - ஒற்றியூராகிய ஒன்றை. திருவொற்றியூரர் அத்தலத்தையே தாம் விரும்பும் இடமாகக் கொண்டார். ஒன்று - ஒன்றுதல்; அதாவது ஏகனாகி அவனருள்வழி நிற்றல்.