|
பாடல் எண் :1314 | வரையி னாலுயர் தோளுடை மன்னனை வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம் திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர் உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே. |
| 10 | பொ-ரை: மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம், அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திருவொற்றியூர்; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்தவராவர். கு-ரை: வரையினால் உயர் - மலைபோன்று உயர்ந்த. ஆல்அசை. மன்னன் - இராவணன். வரையினார் - கயிலைமலைக் குரியவர். வலிசெற்றவர் - வலிமையை அழித்தவர். திரையினார் புடைசூழ் - அலைகளால் சூழப்பட்ட. உரையினால் பொலிந்தார் - புகழ்ந்து பேசுவதால் விளக்கும் அடைந்தவர்கள். திருவொற்றியூரைப் பற்றிய இத்திருப்பதிகத்தை ஓதி விளக்கம் எய்தினார், உயர்ந்தவர்களாவர் என்று உரைத்தலும் ஒன்று. அப்பர் சுவாமிகளும் தமது பதிகப்பயன் உரைத்தது நமச்சிவாயப் பதிகம் கொண்டுணர்க. |
|