பாடல் எண் :1319
மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.

5
பொ-ரை: பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர். தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர்; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன்.
கு-ரை: மட்டு - தேன். நெடுங்கண்ணிபால் - தலைவி இடத்து. இட்டம் - விருப்பம். வேட்கை - ஆசை. துட்டரேல் - இப்பொழுது துஷ்டராக இருப்பாரேயானால். சூழ்ச்சிமை - கருதும் எண்ணம். அறிந்திலேன் - முன்னர் அறிந்திலேன். பட்ட நெற்றியர் - நெற்றிப்பட்டம் என்னும் அணிகலன் அணிந்த நெற்றியை உடையவர்; அகத்துறைப்பாடல்; தோழி அல்லது செவிலி கூற்று.