|
பாடல் எண் :1321 | கட்டி விட்ட சடையர் கபாலியர் எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர் இட்ட மாவறி யேனிவர் செய்வன பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. |
| 7 | பொ-ரை: பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும், கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர். இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன். கு-ரை: கட்டிவிட்ட - கட்டிமுடித்த. கபாலியர் - கபால மேந்தியவர். எட்டி நோக்கி - தம்மை யாரும் காணாதபடி எட்டிப்பார்த்துக் கொண்டு. அவ்வவர் இல் புகுந்து -ஒல்லொருவர் வீட்டிற்குள்ளேயும் நுழைந்து. இட்டமாய் இவர் செய்வன - தம் விருப்பம் போல் இவர் செய்வனவற்றை. அறியேன் - உணர்வதன்றி எடுத்துச் சொல்லும்வகை அறியாதவளாகி இருக்கின்றேன். அகத்துறைப் பாடல். தலைவி கூற்று. |
|