பாடல் எண் :1323
சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பன் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.

9
பொ-ரை: தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திர்ப்பாசூர்த் தலத்திறைவர், சாம்பல் பூசுவர்; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர்; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினை யேறும் ஒருவர்; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர்.
கு-ரை: சாம்பல் - சர்வசங்காரச் சுடலைப்பொடி. தாழ்சடை - தொங்கிய சடைகளை. ஓம்பல் - காத்தல்; தாங்குதல். தாங்கும் இயல்புள்ள அறமே விடையாகலின் ஓம்பல் மூதெருது என்றார். மூது - பழமை; அழியாமை. மால்விடை எனக்கொண்டு காத்தல் தொழிலையுடைய எருதெனினுமமையும். தேம்பல் - இளைத்தல். தீயதோர் - கொடியதொரு.