|
பாடல் எண் :1325 | திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால் எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன் நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால் பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. |
| 11 | பொ-ரை: பருப்பொருளும், நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும், இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர். கு-ரை: திரியும் - பல ஊர்களையும் அழித்தற்குச் சுற்றித் திரியும். செங்கணை - சிவந்த நெருப்பாகிய கணை அல்லது நேரிதாகிய அம்பினாலே. எரிய - எரிந்தழிய. நெரிய - உடல்நெரிய. ஊன்றியிட்டார் - ஊன்றினார். பரியர் நுண்ணியர் - பெரிதினின் பெரியர்; நுண்ணிதின் நுண்ணியர்; "அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்". (திருவிளை. கடவு. வாழ்த்து. 7) தூலசூக்கும வடிவினர் எனலுமாம். |
|