பாடல் எண் :1326
காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.

1
பொ-ரை: மணம் கமழ்கின்ற மாமடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.
கு-ரை: காடு அரங்காகக் கொண்டு என மாறுக. இடுகாட்டை நடமாடும் அரங்கமாகக் கொண்டு என்பது பொருள். கங்குல்வாய் - இரவுப்பொழுதில். கணம் - பூதகணங்கள். பாட - பாட்டிசைக்க. மாநடம் - சிறந்த நடனத்தை. வாடமானிறங்கொள்வர் - மான் போன்றவளாகிய தலைமகள் வாட அவளது நிறத்தைக் கொள்பவர். பசலை பூத்தலால் நிறம் மாறிற்று என்க. மணங்கமழ் - அகிற்புகை முதலியவற்றால் மணங்கமழ்கின்ற. கங்குல் என்றது சர்வசங்கார காலத்தை; அப்பொழுது ஆடும் நடனம் சூக்கும பஞ்சகிருத்திய நடனம் எனப்படும்.