பாடல் எண் :1328
ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம்
தானங் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.

3
பொ-ரை: வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.
கு-ரை: ஞானம் - கலைஞானம். நன்னெறி - அநுபவஞானம். தம்மை அடைந்தார்க்கெல்லாம் - தம்மைச் சேர்ந்தவர் எல்லோர்க்கும். தானங்காட்டுவர் - சரியை, கிரியை, யோக நெறியினர்க்கு; சாலோக, சாமீப, சாரூபங்களாகிய தானத்தை (இடத்தை) வழங்குபவர்.
வானங் காட்டுவர் - ஞானநெறி நின்றார்க்கு சாயுச்யமாகிய வீட்டு நெறிக்கு வழி செய்வார். போல் என்பது அசை. தாளடைதல் - நிஷ்டைகூடுதல். பரமுத்தி நிலையாகிய சிவ சாயுச்யத்தைக் கொடுப்பார். பரமுத்தியினும் முதல்வன் உபகாரம் உண்மையின் காட்டுவர் என்றார். சரியை, யோகங்களும் ஞானம் எனப்படும் என்பதை "விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்...... அரும்பு மலர் காய் கணிகள் அன்றோ பராபரமே" என்னும் தாயுமானவர் திருவாக்கால் உணர்க.