பாடல் எண் :1335
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.

1
பொ-ரை: ஐயாற்றின் கண் எழுந்தருளியுள்ள இறைவர், அன்பர்களின் சிந்தையின்கண் வந்து பொருந்துதல் உடையவர்; சீர்மை உடையவர்; பொந்துகளை உடைய நீண்ட புலால் உடைய வெண்தலையைக் கையில் ஏந்தியவர்; முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலைவேல் பிடித்து, அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர்.
கு-ரை: வந்து சிந்தை - எழுந்தருளி அடியார்கள் மனத்தை. வாய்தல் - ஆட்சி செலுத்தும் வழி. சீரியன் - மேலோன். பொந்து ஆர் - கண், வாய் காது முதலான பொந்துகளை உடைய.
முந்தி - முற்பட்டதாய, வாயது - கூரிய முனையை உடைய. அந்தி வாயது - மலையில் வெளிப்போந்துலவுவது என்றும் அம் தீ வாயது எனப் பிரித்துத் தீய விடத்தை வாயின்கண் உடையது என்றும் பொருள் கொள்ளலாம்.