பாடல் எண் :1336
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையி னீருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெயஞ் சாடுமை யாறரே.

2
பொ-ரை: ஒருபாகத்தே திருமாலை உடையவர். பால்மதியை மகிழ்ந்தளித்தவர். இடர்கள்போக ஆனையின் உரியைப் போர்த்தவர், தோள்களில் கொன்றைமலர் சூடியவர். ஆனைந்து ஆடுபவர்.
கு-ரை: பாகம் - உடம்பின் ஒரு பாகத்தே. மாலை - திருமாலைக் கொண்டு. பால்மதி சூடி மகிழ்ந்தனர் என்க. போக - தேவர்களின் இடர்கள் போகும்படி. கோகு - தோள். கோகம் குலாய தோர் கொன்றை மாலை என்க. குலாயது - விளங்கிச் சூழ்ந்து. கொன்றையுமாக ஆடும் எனக் கூட்டுக.