|
பாடல் எண் :1342 | முன்னை யாறு முயன்றெழு வீரெலாம் பின்னை யாறு பிரியெனும் பேதைகாள் மன்னை யாறு மருவிய மாதவன் தன்னை யாறு தொழத்தவ மாகுமே. |
| 8 | பொ-ரை: முன் துன்ப நெறியின்கண் முயன்றொழுகுவீர் எல்லோரும் பின் அத்துன்ப நெறியினின்று பிரித்தருளுவீராக என்று வேண்டும் அறியாமையுடையவர்களே! நிலைத்த ஐயாற்றில் எழுந்தருளிய மாதவனை முறையே தொழத்தவமாகும். கு-ரை: முன் நையாறு எனப்பிரித்து முன்துன்பநெறியின் கண்ணே முயன்று ஒழுகுவீர் எல்லோரும் என்க. பின் நையாறு எனப் பிரித்துப் பின்னர் அத்துன்ப நெறியினின்றும் பிரித்தருளுவீராக என்று வேண்டும் எனப் பொருள் காண்க. மன்ஐயாறு மருவிய - நிலைத்த ஐயாற்றின்கண் எழுந்தருளிய, மாதவன் தன்னை எனக் கூட்டுக. ஆறுதொழ - பெரியதவத்தோனாகிய பெருமானை முறையாகத் தொழ. |
|