பாடல் எண் :1344
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்க னீரைந்து வாயு மலறவே
அரக்கி னானடி யாலுமை யாறனே.

10
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செவ்வரக்கினைப் போன்று சிவந்த மேனியனும், அழகிய தளிர் போன்று விளங்கும் மேனியனும் ஆவன்; செவ்வரக் கனைய சிவந்த அடி உடைய உமாதேவி அஞ்சுதலும், 'அஞ்சேல்' என்று கூறி இராவணனது பத்து வாய்களும் அலறுமாறு தன் திருவடி விரலால் அரக்கியவன் ஆவன்.
கு-ரை: அரக்கின் மேனியன் - அரக்குப்போன்ற சிவந்த நிறத்தையுடைய மேனியன். அந்தளிர் மேனியன் - அழகிய தளிரின் மென்மை போன்ற மெல்லியன். அரக்கின் சேவடியாள் - அரக்கைப் போன்ற சிவந்த காலடியையுடையாள். அரக்கன் - இராவணன். அரக்கினான் - அழுத்தி நெரியச் செய்தான். அடியால் அரக்கினானும் ஐயாறன் என்க.