பாடல் எண் :1352
ஊழி வண்ணமு மொண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவரை யாறரே.

8
பொ-ரை: ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஓளிரும் இயல்பும், ஓளிச்சுடர் இயல்பும், யானையின் பச்சைத்தோலைப் போர்த்தருளிய இயல்பும், ஊழித்தீ உருவாகிய இயல்பும், கடல்வண்ணமும் உடையவராவர்.
கு-ரை: ஊழி வண்ணம் - ஊழிக்காலமாம் இயல்பு. ஒண்சுடர் - சூரியன், சந்திரன் அக்கினி. ஆழித்தீ - ஊழிக் காலத்தில், பெருகி கடலிலிருந்து, உலகை அழிக்கும் வடவைத்தீ. ஆழி வண்ணம் - கடலாம் தன்மை.