பாடல் எண் :1357
பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவ னொண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.

3
பொ-ரை: இப்பெண், தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும், பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும், ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும், திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும், சுடரே என்றும் சொல்லும் இயல்பினள்.
கு-ரை: பாதிப்பெண் - பார்வதிதேவியின் பாதி உடலை. ஒரு பாகத்தன் - ஒரு பாகத்தே கொண்டவன். பன்மறை ஓதி - வேதங்கள் பலவும் விரித்தவன். ஆதி - முதல்வன்.