பாடல் எண் :1358
கார்க்கொண் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொண் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றைய னாவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.

4
பொ-ரை: இப்பெண், கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும், கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள்; காண்பீராக.
கு-ரை: கார்க்கொள் - கருமையைக் கொண்ட. மா - சிறந்த. முகில் - மேகம். வார்க்கொள் - கச்சினைக் கொண்ட. இறுமாந்து - செருக்கடைந்து. ஆர்க்கொள் - ஆத்திமாலையைக் கொண்ட எனலுமாம். தார்க்கு - மாலைக்கு. தாழுமா - விரும்புமாற்றை. பெருமானை மென்முலையாற் சேர்ந்து இறுமாந்து அவனணிந்திருக்கும் மாலையைப் பெறப் பணிந்துநின்றாள் ஒரு தலைவி; காணுங்கள் என்க.