|
பாடல் எண் :1377 | திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து பருகி யூறலைப் பற்றிப் பதமறிந் துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே. |
| 2 | பொ-ரை: மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு, அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன். கு-ரை: திருகு - மாறுபட்ட, தீர்த்து - மாறுபாடொழித்து. செம்மை செய்து - தூய்மை செய்து. ஊறல் - உள்ளத்துள்ளே ஊறும் தேன் போன்ற சிவாநந்தானுபவம். "கருதுவார் இதயத்துக் கமலத்தூறும் தேனவன்காண்" (தி.6.ப.87.பா.1) பற்றிப்பதமறிந்து பருகி - அன்பால் பணிந்து அப்பெருமானின் திருவருளமுதைச் செவ்வியறிந்து உண்டு. உருகிநைபவர் - மனமுருகி திருவருட் பேற்றிற்கு இளைப்பவர். ஊனம் - குறை. அருகு - அண்மையில். நின்றிடும் - எழுந்தருளுவான். |
|