|
பாடல் எண் :1383 | உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர் தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே இருள றுத்தநின் றீசனென் பார்க்கெலாம் அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே. |
| 8 | பொ-ரை: உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே! தெளிவடைவீர்களாக; தீவினையைச் சேராமல் விரைந்து, இருள் அறுத்து நின்று "ஈசனே" என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன். கு-ரை: உருளும் போது - அழியும் காலம். அறிவொண்ணா - அறிந்து கொள்ள முடியாது. தெருளும் - தெளிவடையுங்கள். சிக்கென - பற்றுக்கோடாக. இருள் - அறியாமையாகிய பந்த பாச மயக்கம். |
|