|
பாடல் எண் :1385 | ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை கீதங் கின்னரம் பாடக் கெழுவினான் பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர் ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே. |
| 10 | பொ-ரை: ஆனைக்காவின் அண்ணல், அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர். கு-ரை: ஓதம் - கடல் நீர்ப்பெருக்கு. கின்னரம் - வாச்சிய விசேடம். கின்னரத்தால் கீதம்பாட என்க. கெழுவினான் - தனக்குப் பகைவன் என்ற எண்ணத்தை விட்டு, அவனோடு அன்பால் பொருந்தினான். பாதம் வாங்கி - அழுத்திய காலைத் தூக்கி. பரிந்து - இரங்கி. ஆதியாயிடும் - தலைவனாயிருக்கும். |
|