|
பாடல் எண் :1389 | மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம் காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன் பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த் தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
| 4 | பொ-ரை: முப்பெருங்கடவுளராயும், அவருள் முதல்வனாயும், இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும், கடிய காலனைக் காய்ந்தவனாயும், அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம். கு-ரை: மூவன் - முதிர்ந்தவன். முதலாய் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாய். காவன் - காப்பவன். கடுங்காலன் - கொடிய எமன். காய்ந்தவன் - சினந்து அழித்தவன். பூவின் நாயகன் - நிலவுலகிற்குத் தலைவன்; அன்றி மலர்மேலுறையும் அரி அயனாக இருப்பவன் என்றும், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில் உறையும் தலைமகன் என்றும் கொள்ளலாம். |
|