|
பாடல் எண் :1393 | அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
| 8 | பொ-ரை: அதிரர், தேவர் இயக்கர், விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும், நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும், சரியை முதலிவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக்கீழ் நாம் இருக்கப் பெற்றோம். கு-ரை: அதிரர் தேவர் - உரத்தகுரலினராய தேவர். இயக்கர் - பதிணெண்கணத்துள் ஒருவர். விச்சாதரர் - வித்யாதரர். கருதநின்றவர் - தேவர் முதலானோர்க்குத் தலைவர் என்று கருதுகின்ற திருமாலும் பிரமனும். காண்பரிதாயினான் - தாணுவாய் விளங்கியவன். பொருதநீர் - அலைக்கும் காவிரிநீர். வரு - வருகின்ற. சதுரன் - சதுரப்பாடுடையவன். திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுட்போல இவர் திருப்பதிகங்களிலும் இலிங்கபுராண வரலாறும் புறச்சமயத் தவரைப்பற்றிய பழிப்பும் நியதமாகச் சிலவற்றில் கூறப்படுகின்றன. |
|