பாடல் எண் :1396
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

1
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.
கு-ரை: கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்று கூறவந்தவர் கொல்லைஏறு என்றார். அன்றி முல்லை நிலத்துக்குரியதான ஏறு எனினும் அமையும். "கொல்லைச் சில்லைச்சே" (தேவாரம்). கோள் - கொல்லும் தன்மையுடைய. தொல்லையூழியர் - மிகப்பழைய ஊழிக்காலங்கள் பலவற்றையும் கண்டவர். வல்லையாய் - வலிமையை உடையையாகி; விரைவுடைமையோடு. பணிசெய் - தொண்டு செய்.