|
பாடல் எண் :1398 | ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை கட்டி நின்ற கழிந்தவை போயறத் தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே. |
| 3 | பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக. கு-ரை: ஒட்டிநின்ற - நம்மோடு நிழலாய் உடனுறைந்தும் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றியும் நிற்கின்ற. உடலுறுநோய் - உடலைப்பற்றிய நோய்கள்; பிறவி நோய் எனலுமாம். கட்டி நின்ற - சூழ்ந்து நிற்கும் பந்தபாசங்கள். கழிந்து - நீங்கி. அவைபோய்அற - நோய், பாசம், வினை என்ற மூன்றும் விலக. தொட்டு நின்றும் - அவன் திருவடிகளை மனத்தால் தீண்டி நின்றும். பட்டியாய் - மீளா அடிமையாய். |
|