|
பாடல் எண் :1407 | கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான் புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன் நெல்லி யானிலை யானநெய்த் தானனைச் சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே. |
| 1 | பொ-ரை: கொல்லிமலையில் வீற்றிருப்பவனும், குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் வீற்றிருப்பவனும், பகைவர் புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும், திருநெல்லிக்காவில் உள்ளவனும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர். கு-ரை: கொல்லியான் - கொல்லிமலைக்குரியவன். தேவாரவைப்புத்தலங்களில் ஒன்று. குளிர்தூங்கு - குளிர்மிக்க. குற்றாலத்தான் - குற்றால மலைச்சாரலில் வாழ்பவன். குளிர்தூங்கு என்பதைக் கொல்லியுடனும் குற்றாலத்துடனும் கூட்டுக. புல்லியார் - அற்பமானவர், கீழோர். நெல்லியான் - திருநெல்லிக்கா என்னும் தலத்துக்குரியவன். நிலையான - என்றும் நிலைத்ததாயுள்ள. சொல்லி - தோத்திரம் சொல்லி. மெய் - உண்மையாக. சுடர் வாணர் - ஞானத்தினால் நிலைபெற்றோராவர் என்க. |
|