பாடல் எண் :1411
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யால்தொழு வார்தலை வாணரே.

5
பொ-ரை: தம் முன்கைகள் நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல் நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும், உமாதேவியோடு விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார் தலைமைத் தன்மையோடு கூட வாழ்பவராவர்.
கு-ரை: முன்கைநோவக் கடைந்தவர் - (மந்திரமலையாம்மத்தை இழுத்து ) முன்கை வலியடையக் கடைந்தவராய தேவாசுரர். நிற்க - ஆலகாலந் தோன்றியதைக் கண்டு அஞ்சி நிற்க.
சங்கியாது - சங்கையடையாது ஐயுறாது. நவின்ற - பொருந்திய. தலை - சிறந்த தலைவராய்.