பாடல் எண் :1412
சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.

6
பொ-ரை: உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி, நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும், உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர்.
கு-ரை: சுட்டநீறு - திருநீறு. நள் - செறிந்த. சிட்டர் - தூய உணர்வினர். தேரும் - ஆராய்ந்து காணும். இட்டமாய் - விருப்பமாய்.