பாடல் எண் :1415
மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.

9
பொ-ரை: திருமாலோடும் வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும். சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும்.
கு-ரை: மாலொடும் - திருமாலொடும். காலொடும் முடி - திருவடிகளையும் திருமுடியையும். காண்பதரிதாயினான் - காணுவதற்கரிதாய் விளங்கியவன். சேலொடும் செருச்செய்யும் - சேல் மீன்கள் தம்முள் போர்செய்யும். மாலொடும் - வேட்கையோடும்.