பாடல் எண் :1424
ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.

8
பொ-ரை: இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும். தீவினையாளர்கள் தெளிவடைந்தாரல்லர். இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன்.
கு-ரை: வானுலகின்கண் ஏறினாராகிய இமையோர்கள் என்க. கண்டும் தேறுவாரலர் - வானோர் வழிபடக்கண்டும் தெளிவாரல்லர். பாறினார் - இழிந்தார். மக்களது பணியையும் விரும்பும் பழனத்தான் என்க.