|
பாடல் எண் :1433 | கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர் மைகொள் கண்டத்த ராகி யிருசுடர் செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி ஐயர் கையதோ ரைந்தலை நாகமே. |
| 7 | பொ-ரை: கையிற்கொண்ட சூலம் உடையவரும், கட்டு வாங்கத்தை உடையவரும், திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும். கு-ரை: கைகொள் - கையின்கண் கொண்ட. கட்டுவாங்கத்தினர் - மழுவாயுதத்தினர். இருசுடர் - சூரிய சந்திரர் வடிவாயிருப்பவர். கையது - கையின்கண் அணியப்பட்டது. கையிற்பிடித்தது கங்கணமாகக் கொண்டது என்றுமாம். |
|