பாடல் எண் :1458
அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

3
பொ-ரை: வண்டுகள் சேர்ந்த மயிலாடுதுறைத் தலத்து இறைவனுக்குத் தொண்டுசெய்யும் அடியார் திருப்பாதங்களைச் சூடிச் செறிந்து கொண்டால், தேவ உலக வாழ்வும், தேவர்களது பதவி இன்பங்களும் கண்டு வீற்றிருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை.
கு-ரை: அண்டர் வாழ்வு - தேவர் பதவி. அமரர் இருக்கை - இங்கு அயன்மால் பதவிகள். கண்டு - அநுபவித்து. வீற்றிருக்கும் கருத்து - தலைமைதோன்ற இருக்கின்ற குறிக்கோள். ஒன்றிலோம் - ஒன்றும் எங்கள் மனத்து இல்லை. ஒன்றும் - சிறிதும். அவை பிறவா நெறியாகிய வீடுபேறாகா. நல்வினைப் பயனுள்ள அளவும் துய்த்து அது முடிந்தவுடன் மண்ணிற்பிறக்கும் நிலையுடையன. 'வானேயும் பெறில் வேண்டேன்' என்றார் மாணிக்கவாசகரும். பொழிலின்கண் வண்டுசேர் மயிலாடுதுறை என்க. பாதங்கள் - திருவடிமலர்களை. சூடி - தலையிலே சூடி. துதையில் - பொருத்திக்கொள்வோமேயானால்; அதுவே வீடுபேறு. ஒன்று, முற்றும்மை தொக்கது.