பாடல் எண் :1466
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவ னின்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழும்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.

11
பொ-ரை: இராவணனது பருத்த தோள்களும் முடிகளும் தூளாகுமாறு இருத்தினவனும், அவனது இன்னிசையைக் கேட்டலும் வரம் அருளியவனும் ஆகிய பெருமானை, மயிலாடுதுறையில் தொழும் கரத்தினை உடையவர்கள் வினை, கட்டற்றுப்போகும் காண்பீராக;
கு-ரை: பருத்த - பெரிய. பொடிபட - சிதற. வரத்தினான் - நாளும், வாளும், பெயரும் வரமாகத் தந்தவன். கரத்தினார் - கையை உடையவர், கருத்தினார் எனவும் பாடம், வினைக்கட்டு - இருவினைப் பந்தபாசங்கள். அறும் - முழுதும் நீங்கும்.