பாடல் எண் :1467
வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே.

1
பொ-ரை: கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச்சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல்கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.
கு-ரை: வண்ணம் - நிறம். வடிவு - உருவம். சென்று - கழிப்பாலைக்குச் சென்று. கண்டிலள் - நேரே காணவில்லை. காணாமலே காதல் கொண்டாள். எண்ணி - மனத்தில் கழிப்பாலை இறைவனையே நினைத்து. நாமங்கள் ஏத்தி - அவன் திருப்பெயர்களைப் பலகாலும் சொல்லித் தோத்திரித்து. நிறைந்திலள் - மனவமைதி கொள்ளாதவளாயிருந்தாள். அல்லது எண்ணுதலிலும் சொல்லுதலிலுமே மனவமைதி கொள்ளாதவளாயினாள். அவனைக் கூடுதற்கு விழைகிறாள் என்பது குறிப்பு.
கண் - இடம். உலாம் - பொருந்திய. கழிப்பாலைப் பெருமான்மேல் காதல் கொண்டு வருந்தும் ஒருத்தியை ஆற்றுவிக்கக் கருதும் செவிலி கூற்று.