|
பாடல் எண் :1469 | மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள் குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ அழக னேகழிப் பாலையெம் மண்ணலே இகழ்வ தோவெனை யேன்றுகொ ளென்னுமே. |
| 3 | பொ-ரை: குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; "அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்" என்கின்றாள். கு-ரை: மழலைதான்வர - பேசுங்கால் மழலை மொழியே வெளிவர. சொல் - செவ்விய சொற்களை. தெரிகின்றிலள் - பேசுதற்கு அறியாதவளாயுள்ளாள்; மிக இளையள் என்றது. குழலின் நேர்மொழி - வேய்ங்குழலை ஒத்து இன்பம்தரும் மொழியினை உடையாள்; அன்மொழித்தொகை. கூறிய - கூறிய சொற்களை. கேண்மினோ - கேளுங்கள். ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்வீராக. என்னும் - என்று சொல்லும். அவள் கூறியன பின்னிரண்டு வரிகள். |
|