|
பாடல் எண் :1475 | பொன்செய் மாமுடி வாளரக் கன்தலை அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன் என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான் துஞ்சும் போதும் துணையென லாகுமே. |
| 10 | பொ-ரை: பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும்போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன். கு-ரை: பொன்செய் மாமுடி - பொன்னால் செய்த பெரிய கிரீடம். என்செயான் - என்ன செய்ய வல்லவன் அல்லன். துஞ்சும்போதும் - இறக்கும்போதும்; உறங்கும்போதும் எனலுமாம். துணை எனல் - துணை என்று சொல்லுதல். ஆகும் - பொருந்தும். அவத்தைகள் பத்தில் சாக்காடு என்னும் நிலையை அடைந்த இடத்தும் என்றபடி. |
|