|
பாடல் எண் :1476 | உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க் கில்லை அவலமே. |
| 1 | பொ-ரை: கோவண உடையினரும், ஒன்றும் குறைவில்லாதவரும், படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை. கு-ரை: ஒன்றும் குறைவிலர் - கோவண ஆடையராயினும் ஒன்றாலும் குறையுடையரல்லர். பாரிடம் - பூதகணங்கள். படைகொள் - படையாக அமைந்த; பைஞ்ஞீலியார் என்க. சூழ்ந்த - வலம் செய்யப் பெற்ற. சதுரர் - சதுரப்பாடுடையவர். உலகமெல்லாம் பரவி மூடி அழிக்க வல்லதாக வந்த கங்கையைப் பனித்துளி போலச் சடையில் தரித்தமைபோல்வன சதுரப்பாடுகள். ஞீலி - ஒருவகை வாழையால் பெற்ற பெயர். |
|