|
பாடல் எண் :1481 | குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான் கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் அண்ட வாண னடியடைந் துய்ந்தனே. |
| 6 | பொ-ரை: உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண்மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான், கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன். கு-ரை: குண்டு - தாழ்வு எனலுமாம். குறி - குறிக்கோள்; உண்மையாக அடையவேண்டிய மெய்ப்பொருள். மிண்டர் - சொற் செயலால் வலியர். படுத்து - பட்டு எனப் பொருள் தந்தது. கண்டங்கார் அண்டவாணன் என்க. கார் - பயிர் அடர்ந்திருத்தலால் கரிய நிறம். அண்டவாணன் - எல்லா உலகங்கட்கும் தலைவன். உய்ந்தனே - பிழைத்தேன். ஏ அசை. |
|