பாடல் எண் :1485
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.

10
பொ-ரை: அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத்தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும், நெருக்கித் திருவிரலால் ஊன்ற, சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை.
கு-ரை: சிவனையே நினைந்து என மாறுக. நெருக்கி - இராவணனை மலையின்கீழ் அகப்படுமாறு நெருக்குதலைச் செய்து. இடர் - துன்பம். இடமாக என்க.