பாடல் எண் :1489
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.

4
பொ-ரை: நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும்; காண்பீர்களாக; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம்.
கு-ரை: அல்லல் - பிறவி முதலிய துன்பங்கள். அருவினை - நீக்குதற்கரிய இருவினைகள்; அல்லல் வினை இவற்றை நீக்கும் என்க. மல்கு - மிக்க. வல்லராகில் - முயற்சியுடையரானால்; அறிவாற்றறல் உடையவரானால்; வேட்களம் சென்று பெருமானைக் கைதொழுதலே வழியாகும்.