|
பாடல் எண் :1500 | உரை தளர்ந்துட லார்நடுங் காமுனம் நரைவி டையுடை யானிடம் நல்லமே பரவு மின்பணி மின்பணி வாரொடே விரவு மின்விர வாரை விடுமினே. |
| 5 | பொ-ரை: வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே, நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக. கு-ரை: உரை தளர்ந்து - பேச்சுக்குழறி. உடலார், ஆர் விகுதி இழிவு குறித்தது. நடுங்காமுனம் - நடுக்கமடையுமுன்னே; முதுமை யடையுமுன்பே என்க. நரைவிடை - வெள்ளிய எருது. புகழுமின் - புகழ் பாடித் தோத்திரியுங்கள். பணிமின் - வணங்குங்கள். பணிவாரொடே விரவுமின் - அடியார் இணக்கம் கொள்ளுங்கள். விரவாரை - அடியரல்லாதாரை. விடுமின் - சேராது நீங்குங்கள். |
|