பாடல் எண் :1502
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.

7
பொ-ரை: மனைவியரும், மக்களும், சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக; எழுவீர்களாக; அப்பெருமானே புகலாவான்.
கு-ரை: மாதரார் - மனைவியர். பேதமாகி - வேறுபட்டவராய். பிரிவதன் முன்னம் - நீங்குவதன் முன்பாக; இறக்குமுன் என்றபடி. எழுமின் போதுமின் என்க - புறப்படுங்கள் செல்லுங்கள் என்பது பொருள். புகலாகும் - அதுவே உயிர்க்கு அடைக்கலமாகும் இடமாகும்.