பாடல் எண் :1504
கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.

9
பொ-ரை: திருமாலும், பிரமனும், பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம். ஆதலால், பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே, இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக.
கு-ரை: காலமான - நமது வாழ்நாட்காலமாயினவை. கழிவதன் முன்னம் - முடிவதற்கு முன்பே. ஏலுமாறு - பொருந்துமாறு. மாமறை நாலும் வல்லவர் - வேதங்கள் நான்கிலும் வல்லவராய அந்தணர். கோன் - தலைவன்; பிரமவிட்டுணுக்களுக்கும் அந்தணர்களுக்கும் தலைவன் என்றபடி.