|
பாடல் எண் :1506 | மாமாத் தாகிய மாலயன் மால்கொடு தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி ஆமாத் தூரர னேயரு ளாயென்றென் றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே. |
| 1 | பொ-ரை: தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும், பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர்; "ஆமாத்தூர் அரனே! அருள்வாயாக" என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார். கு-ரை: மாமாத்து ஆகிய - மிக்க பெருமை உடையராகிய எனலுமாம். (மகத்து என்பதன் திரிபு); மால்கொடு - அறியாமை கொண்டு. தாமா - நாம் அறிவோம் என்னும் ஆணவத்தால்; தாள்முடி காண்கிலர் என்க. ஏமாப் பெய்தி - களிப்பு எய்தி. இறையானை - இறைவனாகிய பெருமானை, அருளாய் என்று பணிந்து இறையானைக் கண்டு ஏமாப்பெய்தினார் என்க. |
|