பாடல் எண் :1508
காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.

3
பொ-ரை: காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் "ஆமாத்தூர் அரனே!" என்று அழைத்தலும், தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன்.
கு-ரை: காமாத்தம் - காமமும் பொருளும் என்றும், காமம் அர்த்தம் என்றுகொண்டு காமத்தையே பொருளாகக்கொண்டு என்றும் காண்க. கார்வலை - அறியாமையைச் செய்யும் வலை. போமாத்தை - மீளும் வழியை; போமாற்றை என்பதன் திரிபு. தேமாத்தீங்கனி - மிக இனிய மாங்கனி. புலம்புவேனாகிய நான் அழைத்தலும் தித்திக்கும்.