|
| பாடல் எண் :1509 | பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. |
| | 4 | பொ-ரை: ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன்; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன; காண்பீராக. கு-ரை: பஞ்ச பூதவலை - ஐம்பூதங்களாகிய வலை. நினைவெய்தலும் - நினைப்பை அடைந்தவுடன், வஞ்ச ஆறுகள் - வஞ்சனையாகிய ஆறுகள். வற்றின - நீங்கின. இறைவனை நினைப்போரை மாயாகாரியங்கள் மயக்கமாட்டா என்பது கருத்து. |
|