பாடல் எண் :1514
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே.

9
பொ-ரை: குண்டர்களும், மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும். காண்பீர்களாக!.
கு-ரை: குண்டர் - தின்று கொழுத்தவர் பீலிகள் - மயில் தோகைகளை. மிண்டர் - வலியர். ஓடு, நீக்கப்பொருளில் வந்தது. வேறுபடுத்துய்யக்கொண்ட நாதன் - பிரித்து உய்யுநெறிகாட்டிய தலைவன். வீரட்டம் - திருவதிகை வீரட்டம். அண்டனார் - உலக முதல்வர்.