பாடல் எண் :1516
விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.

11
பொ-ரை: அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றயவனும், ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன்.
கு-ரை: விடலையாய் - மூர்க்கனாய். விலங்கல் - கயிலை மலை. அடர - நெரிய. உளமதாக்கொண்டு - ஈசனுக்கு என் உள்ளத்தை இடமாக வைத்து. இன்பு - பேரின்பம்.