|
பாடல் எண் :1520 | பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை மேல ளாவது கண்டனள் விண்ணுறச் சோலை யார்தரு தோணி புரவர்க்குச் சால நல்லளா கின்றனள் தையலே. |
| 4 | பொ-ரை: பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும்,விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப்பெண். கு-ரை: பாலையாழ்மொழியாளவள் - பாலையாழ் என்னும்யாழிற் பிறக்கும் இசையை ஒத்த மொழியினை உடையாளாகிய கங்கை. தாழ்-தொங்கும். சடைமேலளாவது-சடையின்மேல் உறைந்திருத்தலை. கண்டனள் கண்டும் என வருவிக்க. விண்ணுற - ஆகாயத்தை அடையுமாறு உயர்ந்த. சோலை ஆர்தரு-சோலைகள் பொருந்திய. சால நல்லள் மிகவும் இனியள், தையல் - பெண்; பார்வதியோடன்றிச் சடையில் மற்றொருத்தியை மறைத்து வைத்திருப்பதைப் பார்த்தும் அவனைக் காதலிக்கின்றாளே ஈதென்ன வியப்பு எனச் செவிலி இரங்கிக் கூறுவது. |
|