|
பாடல் எண் :1521 | பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப் பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது சுண்ண மாடிய தோணிபு ரத்துறை அண்ண லாருக்குச் சால அழகிதே. |
| 5 | பொ-ரை சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ? கு-ரை: பண்ணின் நேர்மொழியாள் - இசையினை ஒத்த மொழியையுடையவளாய். பலியிட்ட - பிச்சையிட்ட, மால்கொடு - காதல் மயக்கம் கொள்ளச் செய்து. பெய்வளை - கையில் பெய்து வைத்த வளையல்களை. கொள்வது - கவர்வது. சுண்ணம் - திருநீறு. ஆடிய - பூசிய. சால அழகிது - மிகமிக அழகாயிருக்கிறது! என்று புகழ்வது போல இகழ்தல். திருநீறு பூசித் துறவுக் கோலம் கொண்டவர் இவ்வாறு செய்வது அழகன்று என்றபடி. |
|