பாடல் எண் :1529
ஊச லாம்அர வல்குவென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்பு லூரர்க்கே.

3
பொ-ரை; அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர். ஆதலால், 'ஓ, மகளே ! சொல்வாயாக ! முறையோ ' என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக.
கு-ரை; ஊசலாம் - மனம் இங்குமங்கும் ஊஞ்சல்போல அலையலாகும்படி அல்லது ஊஞ்சல்போல இங்குமங்கும் எங்கும் அசைந்தாடும் பாம்பு; அல்லது சோர்குழல் ஊசலாம் என்க. அரவல்குல்-பாம்பின் படம்புரையும் அல்குல்.
சோர்குழல்-அவிழ்ந்து விழும் கூந்தலினை உடைய என் மகள். ஏசலாம்பழி- ஊரார் ஏசுதலாகின்ற பழியை, தந்து எழிலைக் கவர்ந்தார். ஓ சொலாய்-(மகளே நிகழ்ந்தது யாது?) முறையோ சொல்வாயாக. புகலூர் இறைவர்க்கு முறையோ என்று பூசல் நாமிடுதும்- புகலூர் இறைவரிடத்துச் சென்று பெருமானே நீ செய்தது நீதியோ என்று ஆரவாரச் சண்டையிடுவோம். இது செவிலி அல்லது தோழி கூற்று.