பாடல் எண் :1530
மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.

4
பொ-ரை; மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும், தன்னை நிகர்க்கு மொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன்.
கு-ரை; மின்னின் - மின்னலினை, நேர்-ஒத்த; இடையாளாகிய உமை என்க. பங்கன்-பக்கத்தே உடையவன். தன்னை நேர் ஒப்பிலாத தலைவனை-தன்னை வேறு யாரும் ஒவ்வாத தலைமையுடையோனை. 'மற்றாரும் தன்னொப் பாரில்லாதானை'. புன்னைக் கானல் - புன்னைமரச்சோலை. என்னுளாக - என் மனத்துள்ளாக.