பாடல் எண் :1533
தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வனலன் தண்புக லூரனே.

7
பொ-ரை: தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர்; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர்; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான்.
கு-ரை: தத்துவம் தலைக்கொண்டு அறிவாரிலை - முப்பத்தாறு தத்துவங்களையும் உள்ளவாறு ஆராய்ந்து அதனை அறிபவர்கள் இல்லை. தத்துவந் தலை கண்டவர் - தத்துவங்களை ஆராய்ந்தவர். கண்டிலர் - தத்துவாதீதனாகிய இறைவனை அறியாதுபோயினர். தத்துவம் தலைநின்றவர்க்கல்லது - தத்துவங்களை ஆராய்ந்து அவற்றைக் கடந்து நிற்பவர்க்கல்லாமல். தத்துவனலன் - அவன் மெய்ப்பொருளல்லன். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் பலர் தத்துவ அளவிலே நின்று தத்துவாதீதனாயிருக்கும் பெருமானை அறியாதவராயினர். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்க்கல்லது அவன் உண்மையான வனல்லன் என்க. முன்னைய மூன்றும் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும். நான்காவது வரியில் தத்துவம் - மெய்ப்பொருள்.